Friday 7 June 2013

Language Rights in Sri Lanka

Language  Rights in Sri Lanka - Rasheed Lanka
இலங்கையில் மொழி உரிமைகள்
றஷீட்,ஏ. முஹம்மட்

அறிமுகம்:
பல்லின மக்களை கொண்ட நாடுகளில் மொழி ஒரு  பிரதான பிரச்சினைக்குரிய விடயமாக உலகில் காணப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில்  தங்களது உள் நாட்டு தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் மொழிக்கொள்கைகள் உருவாக்கப்பட்டு பின்பற்றபட்டு வருகின்றன. பல்மொழிப்புலமை வௌவேறு சமூகங்களுக்கு மத்தியில் ஒருங்கினைந்து வாழ்வதற்கு மிக முக்கியமானதொரு கருவியாக கானப்படுகின்ற அதே வேளை  ஒருவர் சொந்த மொழியில் பேசுவதற்கான அடிப்படை உரிமையினை பாதுகாப்பதாய் அமைய வேண்டும்.  பல்லின, கலாச்சாரங்களைக் கொண்ட இலங்கையிலும்  மொழிரீதியான வேறுபாடு காணப்படுவதனை வரலாறு அடிப்படை ஆயுவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் இலங்கையில் காணப்படும் பல் கலாச்சார சமூகம்  பல்வேறு இன,கலாச்சார,மத, மொழி மற்றும் பிராந்திய அல்லது வட்டார குழுக்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 1

பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலும் சுதந்திரமடைந்த முதல் தசாப்தத்திலும் ஆங்கில மொழி ஆட்சி மொழியாக பயன்படுத்தப்பட்டுள்ளதை வரலாற்று ரீதியாக நோக்கும் போது அறிந்து கொள்ளலாம். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர்  மொழி  அரசியல்  ரீதியான பிரச்சினையாக அடிப்படையில் மாற்றமடைந்து , கடந்த மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கும் அடிப்படையாக அமைந்தது.  இதன் அடிப்படையாக 1956 ஆண்டு உருவாக்கப்பட்ட  சிங்களம் மட்டும் என்ற சட்டம் காணப்படுகின்றது. 2 சிங்கள மொழிப்பரீட்ச்சயம்  அரச வேலைவாய்புகள் பெறுவதற்கும், சேவை நீடிப்பு பெறுவதற்கும்  சாதாரன வயது தொடக்கம் பணி ஓய்வுபெறும் வரை அத்தியாசியமாக காணப்பட்டது. 3

பல்லின மக்களோடு சகவாழ்வுடன் வாழ்வதற்கு மொழி தொடர்பான அடிப்படைச் சட்டங்களை பிரஜைகள் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அத்தியவசிமானதொன்றாகும் .

I:  அடிப்படை உரிமைகள் :
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் அத்தியாயம் III ஆனது,அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. சமத்துவத்திற்கான உரிமை, கலாசார உரிமை மற்றும் மொழி உரிமை ஆகியவைகள் அடிப்படை உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பிலுள்ள சமத்துவத்திற்கான உரிமை பற்றிய ஏற்பாடானது,சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் என்பதுடன் சட்டத்தினால்; சமமாகப் பாதுகாக்;கப்பட உரித்துடையவர்களென்கின்றது.4
மேலும் இவ் ஏற்பாடானது இனம், மொழி… போன்ற காரணங்களுக்காக எந்தப் பிரசைக்கும் பாரபட்சம் காட்டுதலாகாதென்கின்றது.5 ஆயினும், பகிரங்க சேவையில், நீதித்துறைச் சேவையில், உள்ளுராட்சிச் சேவையில் அல்லது பகிரங்கக் கூட்டுத்தாபனமொன்றில் கடமைகளை நிறைவேற்ற ஏதேனும் மொழியை அறிந்திருத்தல் அவசியமாயின் அம் மொழியிலான தகைமையைத் தேவைப்படுத்தலாமென்கின்றது.6  எந்த ஆளும் இனம், மொழி…போன்ற காரணங்களுக்காக கடைகள், பொது உணவுச் சாலைகள், விடுதிகள்,பொதுக் களியாட்ட இடங்கள், தனது மதத்துக்குரிய பொது வழிபாட்டிடங்கள் என்பவைகளுக்குச் செல்வதற்குத் தடைவிதித்தலாகாது எனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.7
மேலும், இவ் அத்தியாயமானது,ஒவ்வொரு பிரசையும் தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அத்துடன் தனது மொழியைப் பயன்படுத்துவதற்கும் ஆன சுதந்திரத்தைக் கொண்டுள்ளாரென்கின்றது. 8

II.  1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் அத்தியாயம் ஐஏ ஆனது மொழி என்ற தலைப்பின் கீழ் மொழி உரிமைகள் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தமும் 16 ஆவது திருத்தமும் தமிழ் மொழியின் அரசியலமைப்பு அந்தஸ்து தொடர்பான முன்னேற்றகரமான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தின. தமிழ் மொழியானது,அரசகரும மொழி, தேசிய மொழி,பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுரதிகார சபை மொழி, கல்விமொழி, நிருவாக மொழி, சட்டவாக்க மொழி,நீதிமன்ற மொழி ஆகிய அரசியலமைப்பு அந்தஸ்துக்களைக் கொண்டுள்ளது.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசகரும மொழிகளாக உள்ளன. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.9 தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் உள்ளன.10  பாராளுமன்ற உறுப்பினரொருவர் பாராளுமன்றத்திலும், மாகாண சபையின் உறுப்பினரொருவர் மாகாண சபையிலும்,உள்ளுரதிகார சபையின் உறுப்பினரொருவர் உள்ளுரதிகார சபையிலும் எந்தவொரு தேசிய மொழியிலும் தனது கடமைகளைப் புரியவும் பணிகளை நிறைவேற்றவும் உரித்துடையவர். 11

ஆளொருவர் எந்தவொரு தேசிய மொழியிலும் கல்வி கற்பதற்கு உரித்துடையவர்.12 அரச பல்கலைக் கழகமொன்றின் கற்கை நெறியொன்று ஏதேனுமொரு தேசிய மொழியிலிருந்தால், மற்றைய தேசிய மொழியில் கல்வி கற்று பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்காக அக் கற்கை நெறியானது மற்றைய தேசிய மொழியிலும் இருத்தல் வேண்டும். ஆனால் அக் கற்கை நெறியானது வேறேதேனும் பல்கலைக் கழகத்தில் மற்றைய தேசிய மொழியிலிருந்தால்,மற்றைய தேசிய மொழியிலும் அக் கற்கை நெறியிருத்தல் வேண்டும் என்ற தேவைப்பாடு ஏற்புடையதாகாது.13

பகிரங்க சேவை, நீதித்துறைச் சேவை, மாகாண பகிரங்க சேவை,உள்ளுராட்சிச் சேவை அல்லது ஏதேனும் பகிரங்க நிறுவனம் என்பவற்றுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கான ஏதேனும் பரீட்சையொன்றில் ஆளொருவர் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தோற்ற உரித்துடையவர். ஆயினும்,அவரது கடமைகளை நிறைவேற்ற ஏதேனும் மொழியை அறிந்திருத்தல் அவசியமாயின் அம் மொழியிலான தகைமையைத் தேவைப்படுத்தலாம். 14
சிங்களமும்,தமிழும் இலங்கை முழுவதிலும் நிருவாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன் வடக்கு - கிழக்கு மாகாணம் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன்,பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும் பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும்.15 பகிரங்க நிறுவனம் என்பது, அரசாங்க திணைக்களம் அல்லது நிறுவனம்,பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது நியதிச் சட்ட முறையான நிறுவனமாகும்.
இரு மொழி நிர்வாகப்பிரிவுகளாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நிர்வாகப் பிரிவுகளும் காணப்படுகின்றன. மொழிவாரியான சிறுபான்மைச் சனத்தொகையின் விகிதாசாரத்தைக் கருத்திற் கொண்டு இரு மொழிகளும் நிருவாக மொழிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிக்கலாம். வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயான பல பிரதேச செயலாளர் பிரிவுகள் இரு மொழி நிருவாகப் பரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில்: அம்பேகமுவ, ஹங்குராங்கெத்த, கொத்மலை, நுவரெலியா மற்றும் வலப்பன பிரதேசசெயலாளர் பிரிவுகளும் 16
பதுளை மாவட்டத்தில் : பண்டாரவளை, எல்ல, ஹல்துமுல்ல, ஹப்புத்தளை,ஹாலிஎல, மீகஹகிவுல,பசறை, பதுளை,லுணுஹல,வெலிமட, சொரணாதோட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் 17
கொழும்பு மாவட்டத்தில் : கொழும்பு,திம்பிறிகஸ்யாய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் 18
காலி மாவட்டத்தில் : காலி நகர்சார் பிரதேச செயலாளர் பிரிவுகளும் 19 களுத்துறை மாவட்டத்தில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவும் 20
கண்டி மாவட்டத்தில் : அக்குறண,தெல்தோட்ட, பன்வில, பஸ்பாஹே ஹோரல, உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளும் 21
புத்தளம் மாவட்டத்தில் : கல்பிட்டிய,முந்தல், புத்தளம், வணாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் 22 இரு மொழி நிருவாகப் பரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்களம் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படும் இடப்பரப்பில்,ஆளொருவர் (அலுவலராகச் செயலாற்றுபவர் தவிர) தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எவரேனும் அலுவலரிடமிருந்து செய்தித் தொடர்புகள் பெறுவதற்கும், அந்த அலுவலருடன் தொடர்பு கொள்வதற்கும், அவருடன் அலுவல் கொண்டுநடாத்துவதற்கும்; ஏதேனும் அலுவலக முறையான ஆவணத்திலிருந்து பிரதிகளை அல்லது பொழிப்புகளை எடுப்பதற்கும் உள்ள உரிமையைச் சட்டம் ஏற்றுக் கொண்டால்,
தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அவ் ஆவணத்திலிருந்து பிரதியொன்றை அல்லது பொழிப்பொன்றை அல்லது விடயத்திற்கேற்ப மொழி பெயர்ப்பொன்றை பெறுவதற்கும்; அவருக்கு வழங்கப்படும் நோக்கத்திற்காக அலுவலரால் ஆவணமொன்று எழுதப்படும் போது அவ் ஆவணத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பெறுவதற்கும் அல்லது அதன் மொழிபெயர்ப்பைப் பெறுவதற்கும் உரித்துடையவராவார்.23
இதே போன்று தமிழ் மொழியானது நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படும் இடப்பரப்பில் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகள் ஏற்புடையதாகவிருக்கும்.24

மாகாணசபையொன்று அல்லது உள்ளுர் அதிகார சபையொன்று அது அலுவல்களை நடாத்தும் மொழியில் அலுவலருடன் தொடர்புகொள்ளவும் அலுவல்களைப் புரியவும் உரித்துடையதாகும். ஆயினும், வேறு நிருவாக மொழி பயன்படுத்தப்படும் மாகாணசபை,உள்ளுரதிகார சபை,பகிரங்க நிறுவனம் ஒன்றிடமிருந்து அல்லது பணியாற்றுகின்ற அலுவலரிடமிருந்து ஆங்கிலத்தில் தொடர்புகளைப் பெறுவதற்கும் அலுவல்களை நடாத்துவதற்கும் மாகாணசபையொன்றுக்கு, உள்ளுர் அதிகார சபையொன்றுக்கு, பகிரங்க நிறுவனமொன்றுக்கு அல்லது பணியாற்றுகின்ற அலுவலருக்கு உரித்துண்டு.25
சிங்களமும் தமிழும் நீதிமன்றங்களின் மொழிகளாக இலங்கை முழுவதிலும் இருத்தல் வேண்டுமென்பதுடன் தமிழ் மொழி நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படும் இடப்பரப்புத் தவிர்ந்த ஏனைய இடப்பரப்புகளில் அமைந்திருக்கும் நீதிமன்றங்களின் மொழியாகச் சிங்களம் பயன்படுத்தப்படுதல் வேண்டும். பதிவேடும் நடவடிக்கைகளும் நீதிமன்ற மொழியில் இருத்தல் வேண்டும். 26
நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழியை அறிந்திராத எவரேனும் நீதிபதி,யூரர்,கட்சிக்காரர் அல்லது விண்ணப்பதாரர், அல்லது அக் கட்சிக்காரரின் அல்லது விண்ணப்பதாரரின் பிரதிநிதி நீதிமன்ற நடவடிக்கைகளை விளங்கிக் கொள்வதனையும் அவைகளில் பங்குபற்றுவதனையும் அவருக்கு இலகுவாகச் செய்வதற்காக,அரசினால் ஏற்பாடு செய்யப்படும் மொழி பெயர்ப்பைப் பெறுவதற்கும் பதிவேட்டின் பகுதியை அத்தகைய மொழியில் அல்லது அதன் மொழிபெயர்ப்பில் பெறுவதற்கும் உரிமையுடையவர்.27
நீதி அமைச்சர் ஏதேனும் நீதிமன்றத்திலுள்ள பதிவேடுகளிலும் நடவடிக்கைகளிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை அனுமதித்துப் பணிப்புகளை வழங்கலாம்.28
பிரஜை ஒருவரின் மொழி உரிமை மீறபட்டால் : அரசியலமைப்பின் அத்தியாயம் III இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையானது அல்லது அத்தியாயம் IV இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழி உரிமையானது ஆட்சித்துறை நடவடிக்கையால் அல்லது நிருவாக நடவடிக்கையால் மீறப்பட்டமை அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை பற்றி விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கத்தை உயர் நீதிமன்றம் கொண்டுள்ளது.29 உரிமை மீறலுக்குள்ளானவர் தாமாகவோ அல்லது அவரது சட்டத்தரணி மூலமாகவோ உரிமை மீறப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்குள் நிவாரணம் கோரி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்.30
1996 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்துப் பொருத்தமான விதந்துரைகளைச் செய்வதற்கான தத்துவத்தைக் கொண்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) கீழ் அதிகாரமளிக்கப்பட்டு;ள்ள நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர்,பகிரங்க உத்தியோகத்தர்கள் போன்றவர்களால் புரியப்பட்ட அடிப்படை உரிமை மீறல் அல்லது வேறு அநீதி தொடர்பாக விசாரணை செய்து தீர்மானமெடுக்கவும் விதந்துரைகளைச் செய்யவும் தத்துவம் கொண்டுள்ளார்.

அரசகரும மொழிகள் ஆணைக்குழு:  1991 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழு சட்டமானது அரசகரும மொழிகள் ஆணைக்குழுவைத் தாபித்தது. இவ் ஆணைக்குழுவின் பொதுவான குறிக்கோள்களாக, ஏனையவைகளுடன் அரசியலமைப்பின் அத்தியாயம் IV இலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகுவதனைக் கண்காணிப்பது மற்றும் மேற்பார்வை செய்வது மற்றும் தானாக அல்லது பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக புலனாய்வு செய்வது,இச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவாறான பரிகார நடவடிக்கையை எடுப்பது ஆகியவைகள் உள்ளன.31 இவ் ஆணைக்குழுவின் தத்துவங்களாக ஏனையவைகளுடன் மொழிகளின் பயன்பாட்டை பாதிக்கும் ஏதேனும் ஒழுங்கு விதிகளைää நெறிப்படுத்தல்களை, அல்லது நிருவாகச் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதும் உள்ளது.32 ஆணைக்குழுவானது, ஏதேனும் பகிரங்க நிறுவனத்தால் அரசியலமைப்பின் அத்தியாயம் IV  இலுள்ள மொழி உரிமை பற்றிய ஏற்பாடுகள் இணங்கியொழுகப்படாமை தொடர்பான முறைப்பாடுகளைப் புலன்விசாரணை செய்யும்; தத்துவத்தைக் கொண்டுள்ளது.33 அரசகரும மொழிகள் ஆணைக்குழு சட்டமானது, பகிரங்க அலுவலரொருவர் அவருடைய உத்தியோகபூர்வ கடமைகளைப் புரிகையில் சம்பந்தப்பட்ட மொழி; தொடர்பான அவருடைய கடமைகளை நிறைவேற்ற,வேண்டுமென்று (றடைடகரடடல) தவறினால் அல்லது உதாசீனஞ் செய்தால் குற்றத் தவறைப் புரிந்தவராவார் என்கின்றது.34
--------------------------------------------------------

  1. Historian  R.A.L.H. Gunawardena points out that ancient Brahmi stone inscriptions found in  the country refer to different group identities    such as Kabojha, Milaka and Damedawhich might have been tribal groups (Gunawardena 1990: 46).
  2. Kearney 1967; De Votta 2004
  3. Gunasena 2006: 233
  4. அரசியல் அமைப்பின் உறுப்புரை 12(1)
  5. அரசியல் அமைப்பின் உறுப்புரை 12(2) 
  6. அரசியல் அமைப்பின் உறுப்புரை 12(2) இன் காப்பு வாசகங்கள். 
  7. அரசியல் அமைப்பின் உறுப்புரை 12(3) 
  8. அரசியல் அமைப்பின் உறுப்புரை 14(1)(F)
  9. அரசியல் அமைப்பின் உறுப்புரை 18 
  10. அரசியல் அமைப்பின் உறுப்புரை 19 
  11. அரசியல் அமைப்பின் உறுப்புரை 20 
  12. அரசியல் அமைப்பின் உறுப்புரை 21(1) 
  13.  அரசியல் அமைப்பின் உறுப்புரை 21(2)
  14. அரசியல் அமைப்பின் 22(5) 
  15.  அரசியல் அமைப்பின் 22(1)
  16. Gazette No. 1105/25 of 12-11-1999
  17. Gazette No.1105/25 of 12-11-1999 and 
  18. Gazette No. 1283/3 of 07-04-2003
  19. Gazette No. 1171/18 of 14-02-2001
  20. Gazette No. 1283/3 of 07-04-2003
  21. Gazette No. 1283/3 of 07-04-2003
  22. Gazette No. 1283/3 of 07-04-2003
  23. Gazette No. 1283/3 of 07-04-2003
  24. உறுப்புரை 22(2) 
  25. உறுப்புரை 22(3)
  26. உறுப்புரை 22(4)
  27. உறுப்புரை 24(1)
  28. உறுப்புரை 24(3) 
  29. உறுப்புரை 24(4)
  30. உறுப்புரை 126(1) 
  31. உறுப்புரை 126(2)
  32. பிரிவு 6 
  33. பிரிவு 7 
  34. பிரிவு 18 
  35. பிரிவு 28

Bilingual administrative division map of Sri Lanka:






















Continue Part -II